மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா? எங்குப் பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்? உன் மூச்சை உள்ளே இழு, வெளியே விடு. உன் மூச்சின் உள் சென்று வெளிவரும் நான்தான் பேசுகிறேன்.
வாழும் உயிர்களின் உயிர்மூச்சு நான். என்னைக் கண்களால் காணமுடியாது: மெய்யால் உணரமுடியும். என்னால் மழை: என்னால் பருவமாற்றம்: என்னால் இசை: என்னாலும் இலக்கியம்: இன்னும் என்னை யாரென்று தெரியவில்லையா? நான்தான் காற்று.
தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றுள் என்னையும் ஒன்றாய்ச் சேர்த்தது எனக்குப் பெருமையே!
உயிராக நான்
உங்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது என் இயக்கம்தானே! அதனால்தான் திருமூலர் தம் திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப்
பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார். பிற்கால ஒளவையார் தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்.
– ஒளவை குறள், 49
என்று என்னைச் சிறப்பித்துள்ளார்.
பல பெயர்களில் நான் உங்களின் பெயருடன் ஒரே ஒரு செல்லப்பெயரும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் எனக்கோ இந்தப் பூவுலகில் பல பெயர்கள் உண்டு. காற்று. வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களால் நான் அழைக்கப்படுகிறேன்.
பருவநிலை. சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்பத் தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று பனிக்காற்று. வாடைக்காற்று, மேல்காற்று. கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று. கடுங்காற்று. புயல்காற்று, பேய்க்காற்று, சுழல்காற்று. சூறாவளிக்காற்று எனப் பல்வேறு பெயர்களால் நான் அழைக்கப்படுகிறேன்.
நான்கு திசையிலும் நான் வீசுகின்ற திசையைக் கொண்டும் தமிழர்கள் எனக்குப் பெயர் சூட்டியுள்ளனர்.
கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது நான் கொண்டல் எனப்படுகிறேன். கொண்டலாக நான் குளிர்ச்சி தருகிறேன்: இன்பத்தைத் தருகிறேன்; மழையைத் தருகிறேன்; கடல் பகுதிக்கு மேலுள்ள மழைமேகங்களைச் சுமந்து வருவதால் மழைக்காற்று எனப்படுகிறேன்.
மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்; மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன்; வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறேன்.
வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்போது நான் வாடைக்காற்று எனப்படுகிறேன்.
நான் பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.
தெற்கிலிருந்து வீசும்போது நான் தென்றல் காற்று எனப்படுகிறேன்; மரம், செடி. கொடி,ஆறு,மலை. பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறேன்.
தென்றலாகிய நான்,இலக்கியத்தில் பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், இளங்கோவடிகள் என்னை,
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்”
என நயம்பட உரைக்கிறார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது. என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,
“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலோ”
எனத் தூது செல்ல என்னை அன்போடு அழைக்கிறாள். அது மட்டுமல்ல,
*நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே”
எனப் பலவாறாக இன்றளவும் இலக்கியப் படைப்புகளிலும், திரையிசைப் பாடல்களிலும் நான் நீங்கா இடம் பிடித்திருக்கிறேன்.
பழங்காலத்தில் முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றாகிய என்னால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால்தான் நிகழ்ந்தன.
“நளி,இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!
-“புறம். 66
எனக் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில், சங்ககாலப் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார் ‘வளி’ எனக் குறிப்பிட்டுச் சிறப்புச் செய்திருப்பது என்னையே!
கிரேக்க அறிஞர் “ஹிப்பாலஸ்” (Hippalus) என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார் என்பது வரலாறு. அதற்கும் முன்னரே என் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
மழை தருவேன் நான்
நான் பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டுவந்து மழையைத் தருகிறேன்: தென்மேற்குப் பருவக்காற்றாக, வடகிழக்குப் பருவக்காற்றாக உலா வந்து மேகத்தைக் குளிர்வித்து மழையாகத் தருகின்றேன். கதிரவனின் வெப்பத்தால் சூடாகி, அடர்த்தி குறைந்து மேலே செல்லும் நான், அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியும் பருவக்காற்றாக மாறுகின்றேன்.
ஜூன்முதல் செப்டம்பர்வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர்முதல் டிசம்பர்வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகின்றேன்.
இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகின்றேன். இந்தியாவின் முதுகெலும்புவேளாண்மைதானே! இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன். இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
தடம் பதிப்பேன் நா
வடகிழக்குப் பருவ காலங்களில், தாழ்வுமண்டலமாய்த் தவழ்ந்து புயலாய் மாறிப் புறப்படுவேன். ஆற்றலுடன் வீறுகொண்டு பயணிக்கத் தொடங்கினால் என்னைத் தடுக்க யாராலும் இயலாது: மழையாகப் புயலாகத் தடம் பதிப்பேன் நான்
என் ஆற்றலை, வளி மிகின் வலி இல்லை (புறம். 51) என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார். இதுபோன்றே மதுரை இளநாகனார் (புறம். 55) கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று என் வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளா
ஆற்றலாக நான்
நான் உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கின்றேன்: தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு உதவுகின்றேன்; விதைகளை எடுத்துச் சென்று பல இடங்களிலும் தூவுகின்றேன்.
பூவின், தேனின், கனியின், தாவரத்தின், உயிரினத்தின் மணத்தை என்னில் சுமந்து, புவியின் உயிர்ச் சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க உதவுகின்றேன். இவை மட்டுமல்ல, உங்கள் நவீன தொலைத்தொட மையமாகவும் நானே உள்ளேன்
காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்’ எனும் புதுமொழிக்கு வித்தாகிறேன். புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும்போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படக் காரணமாகிறேன்.
உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம்பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்பதும் எனக்குப் பெருமையே. ஆனால், என்னை.
உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடம் இந்தியாவுக்கு என்பதை அறியும்போது எனக்குப் பெருந்துயரே.
மனிதனால் மாசடையும் நான்
நீங்கள் உணவின்றி ஐந்து வாரம் உயிர்வாழ முடியும்; நீரின்றி ஐந்து நாள் உயிர் வாழ முடியும்: ஆனால் நானின்றி ஐந்து நிமிடம் கூட உங்களால் உயிர் வாழ முடியாது. இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தும் என்னை நேசிப்பதில்லை. ஒவ்வொரு விநாடியும் நான் உங்களால் மாசுபடுகிறேன்.
குப்பைகள், நெகிழிப் பைகள், மெதுஉருளைகள் (tyres) போன்றவற்றை எரிப்பது, குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டப்பட்ட அறை ஆகியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துவது, மிகுதியாகப் பட்டாசுகளை வெடிப்பது, புகை வடிகட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குவது, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாத தனிமனிதரின் மிகுதியான ஊர்திப்பயன்பாடு, வானூர்திகள் வெளிவிடும் புகை என உங்களின் அத்தனை செயல்பாடுகளாலும் என்னைப் பாழாக்குகிறீர்கள்.
இதனால் கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய் எனப் பல நோய்களால் துன்பமடைகிறீர்கள். இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது காற்று மாசுபாடே என்பது தெரியுமா உங்களுக்கு?
நான் மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.