வீட்டில் முதல் பொறுப்பாளர்கள் பெற்றோர்கள். அவர்கள் தாமே தனித்து இயங்குகிறார்கள். எனவே அவர்களே முதன்மையானவர்கள். அதுபோலவே நம் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மையாக விளங்குகின்றன. எனவே இதனை முதல் எழுத்துக்கள் என்பர். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பெற்றோரை சார்ந்து இருப்பது போல, முதலெழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என அழைக்கிறோம்.
எடுத்துக்காட்டாக,
உடல் இந்த சொல்லின் உ என்பது உயிரெழுத்து. ட, ல் என்பவை என்ன எழுத்துக்கள் என்று உங்களுக்குத் தெரிகிறதா?
ட – உயிர்மெய் எழுத்து
ல் – மெய்யெழுத்து
இதில் ட்+அ=ட . ட் என்னும் மெய்யெழத்தும் , அ என்னும் உயிரெழுத்தும் சேர்ந்து ட என்னும் உயிர் மெய் எழுத்தாக பிறந்தது. இதனைப் போன்றே மற்ற உயிர்மெய் எழுத்துக்களும் உயிரையும் மெய்யையும் சார்ந்து வரும்.
உயிர்மெய், ஆய்தம் , உயிரளபெடை , ஒற்றளபெடை ,குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் , ஒளகாரக்குறுக்கம் , மகரக்குறுக்கம் , ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும்.