இந்த பதிவில் பகுபத உறுப்புகள் பற்றி முழுமையாக காண்போம்.
பகுபத உறுப்புகள் :
தமிழ் சொல்லுக்கு வழங்கும் பெயர்களுள் ஒன்று பதம் என்பதாகும். இலக்கண வகையில் அமைந்த சொற்கள் நான்கனுள் பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் பிரித்துப் பொருள் தரும் நிலையில் இருந்ததால் இவற்றை பகுபதங்கள் என்பர்.
இடைச்சொல் உரிச்சொல் பகாப்பதத்திற்கு உரியன ஆகும். இவற்றுள் பெயர் பகுபத சொற்களை காட்டிலும் வினைப் பகுபத சொற்களே வழக்கில் மிகுதியாக உள்ளன.
சொற்களை பொருள் நோக்கிலும் பிரித்து எழுதுவர் . ஒவ்வொரு சொல்லிலும் உள்ள உறுப்புகள் எவை எவை என்ற வகையிலும் பிரித்து எழுதுவர் .
அவ்வாறு பிரித்து எழுதும் உருப்புகளை பகுபத உறுப்புகள் என்பர். பகுதி , விகுதி , இடைநிலை , சந்தி , சாரியை , விகாரம் என ஆறு வகையாகப் பிரிக்கப்படும்.
ஒரு வினைப் பகுபதத்தில் பகுதியும் விகுதியும் அடிப்படை உறுப்புகளாக உள்ளன. சில சொற்களில் பகுபத உறுப்புகள் ஒன்றோ இரண்டோ குறைந்தும் வரும்.
சில சொற்கள் ஆறு உறுப்புகள் பெற்றும் வரும். ஒரு பகுபதத்தில் பகுதி விகுதி இடைநிலை என்பவையே பொருள் தரும் உறுப்புகளாகும்.