வள்ளலார் அருளிய பாடல்கள் : |
தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி மனமுருகிப் பாடி மகிழ்வார். இப்பாடல்களின் தொகுப்புதான் தெய்வமணிமாலை.
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார். உறவு கலவாமை வேண்டும்”
என்பன போன்ற அற்புதமான பாடல்கள் கற்போரை மனமுருகச் செய்யும். இராமலிங்கர்.
‘வடிவுடை மாணிக்கமாலை என்னும் நூலையும், திருவொற்றியூர்ச் சிவபெருமான் மீது ‘எழுத்தறியும் பெருமான் மாலை‘ என்னும் நூலையும் பாடினார். இவர் பொதுமை உணர்வுடன் பிற தெய்வங்களின் மீதும் பாடல்களைப் பாடியுள்ளார்.
இப்பாடல்கள் எளிய, இனிய பாடல்கள்; கல்லார்க்கும். கற்றவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் கருத்து நிறை பாடல்கள்.
தமிழ்ப்பற்று |
வள்ளலார் மொழிப்பற்று மிக்கவர்; தமிழ்மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார். “பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய், சாகாக் கல்வியை மிகவும் எளிமையாக அறிவிப்பதாய், திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம்பற்றச் செய்து, அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப்பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்” என்று உண்மை உரைத்தார்.
வள்ளலார் ஏற்படுத்திய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் |
பிற்காலத்தில் சாதிகளிலும், மதங்களிலும், சமயச்சடங்குகளிலும் உழன்று கொண்டிருந்த மக்களை அவற்றிலிருந்து மீண்டுவரச் சமரச சுத்த சன்மார்க்கப்பாதை அமைத்தவர் வள்ளலார் எனும் இராமலிங்க அடிகள்.
19ஆம் நூற்றாண்டைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் பெருமக்களாலும், சமூகச் சீர்த்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினைப்பெற்றவர் வள்ளலார் என்று அறிஞர் போற்றுவர்.
அக்காலத்தே புலவர் பசிப்பிணி-மருத்துவர் வள்ளலார்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்‘ என்று பயிர் வாடத் தாம் வாடியவர் வள்ளலார். ‘வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்தவரையும், நீடியபிணியால் வருந்துவோரையும், ஈடில் மானிகளாய், ஏழைகளாய் நெஞ்சு இளைத்தோரையும்‘ கண்டு வருத்தத்தால் உயிர் இளைத்தார் இராமலிங்கர்.
இவ்வருத்தம் நீங்கவே. வடலூரில் சத்திய தருமச் சாலையை நிறுவிச் சாதி, மத வேறுபாடின்றிட் பசித்தோர்க்கெல்லாம் உணவிட்டார். அங்கு, அவர் ஏற்றி வைத்த அடுப்பின் கனல், இன்றும் பல்லோர் பசிப்பிணியைப் போக்கி வருகிறது.
சன்மார்க்க சங்கத்தின் நோக்கங்கள்: |
வள்ளலார். இறைவன் ஒருவனே; அவன் ஒளிவடிவினன் என்பதையும் அருட்பெருஞ்சோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்குத் தனிப்பெருங்கருணையே கருவி என்பதையும் உலகோர்க்கு உணர்த்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் நிறுவினார்.
சாதி, மத, சமய, இன வேறுபாடுகள் கூடாது; எவ்வுயிரையும் கொல்லக் கூடாது; புலால் புசித்தல் கூடாது; எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ண வேண்டும்; ஏழை மக்களின் பசியைப் போக்குதல் வேண்டும்; உலக மக்கள் அனைவரையும் உடன் பிறப்புகளாய் நேசித்தல் வேண்டும் என்பன இச்சங்கத்தின் நோக்கங்கள் ஆகும்.