வேற்றுமை உருபுகள்:
வேற்றுமை உருபுகள் என்றால் என்ன?
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களை கவனிக்கவும்.
1. கண்ணன் பரிசு பெற்றான்.
2. தலைமையாசிரியர், கண்ணனைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்.
முதல் தொடரில் கண்ணன் என்னும் பெயர்ச்சொல் அமைந்துள்ளது. இரண்டாம் தொடரில் அதே பெயர்ச்சொல் கண்ணனை மற்றவர் பாராட்டியதனைக் குறிக்கிறது. இத்தொடரில், கண்ணன் என்னும் பெயர்ச்சொல்லின் பொருள் வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டுக்குக் காரணம், கண்ணன் என்னும் பெயரோடு சேர்ந்துள்ள ‘ஐ’ என்னும் உருபு.
இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது, வேற்றுமை எனப்படும். பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் உருபுகளை’ வேற்றுமை உருபுகள்’ என்பர்.
வேற்றுமை உருபுகளின் வகைகள் யாவை?
இவ்வாறு பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு வேற்றுமை உருபு எனப்படும். இவ்வேற்றுமை
- முதல் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- ஆறாம் வேற்றுமை
- ஏழாம் வேற்றுமை
- எட்டாம் வேற்றுமை
என எண் வகைப்படும்.
முதல் வேற்றுமை உருபுகள் விளக்குக.
இயல்பான பெயர், (எழுவாய்) பயனிலையைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும். முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை (இது வினையையும் பெயரையும் வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடியும்.) (எ.கா.)
தொடர்கள் | பயனிலை |
---|---|
கண்ணன் வந்தான். | வினைப் பயனிலை |
அவன் கண்ணன் | பெயர்ப் பயனிலை |
அவன் யார்? | வினாப் பயனிலை |
எழுவாய் வேற்றுமைக்கு எனத் தனி உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபுகள் விளக்குக.
இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ என்பதாகும்.
வளவன் செய்யுளைப் படித்தான்.
இத்தொடரில் உள்ள செய்யுள் என்னும் பெயர்ச்சொல் ‘ஐ’ என்னும் உருபையேற்றுச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுகிறது. இவ்வாறு பெயர்ச்சொல்லினது பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை ஆகும்.
மூன்றாம் வேற்றுமை உருபுகள் விளக்குக.
மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகியன. (எ.கா.)
தொடர்கள் | வேற்றுமை உருபு |
---|---|
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது. | ஆல் |
தூங்குகையான் ஓங்கு நடை | ஆன் |
தாயொடு மகள் வந்தாள். | ஓடு |
தந்தையோடு தாய் வந்தாள். | ஓடு |
தந்தையுடன் தம்பியும் வந்தான். | உடன் |
நான்காம் வேற்றுமை உருபுகளை விளக்குக.
நான்காம் வேற்றுமை உருபு ‘கு‘ ஆகும்.
தலைவர் நந்தினிக்குப் பரிசு வழங்கினார்.
‘நந்தினி ‘என்னும் சொல் ‘கு’ என்னும் உருபை ஏற்றுப் பொருள் வேறுபடுத்திக் காட்டுகிறது.
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் விளக்குக.
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இன் இல் ஆகும்.
கொடையில் சிறந்தவர் பாரி.
இந்தியாவின் தெற்கு எல்லை குமரி. இத்தொடர்களில் கொடை, இந்தியா என்னும் சொற்களுடன் இல், இன் என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்து கின்றன.
ஆறாம் வேற்றுமை உருபுகள் விளக்குக.
ஆறாம் வேற்றுமை உருபு ‘அது‘ என்பது.
(எ.கா.) இராமனது வீடு. எனது புத்தகம்.
இத்தொடர்களில் இராமன், என் ஆகிய பெயர்ச்சொற்களுடன் ‘அது’ என்னும் வேற்றுமை உருபு சேர்ந்து பொருளை வேறுபடுத்துகிறது.
ஏழாம் வேற்றுமை உருபுகள் விளக்குக.
ஏழாம் வேற்றுமைக்குக் கண், உள், மேல், கீழ் என்பன உருபுகளாம். (எ.கா.)
வீட்டின்கண் குழந்தை விளையாடுகிறது.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
கூரையின்மேல் சேவல் உள்ளது.
கட்டிலின்கீழ் நாய் படுத்துள்ளது.
இத்தொடர்களில் வீடு, பெட்டி, கூரை, கட்டில் ஆகிய சொற்களுடன் கண், உள், மேல், கீழ் ஆகிய உருபுகள் சேர்ந்து இடப்பொருளை உணர்த்துகின்றன.
எட்டாம் வேற்றுமை உருபுகள் விளக்குக.
எட்டாம் வேற்றுமை உண்டு; ஆனால், அதற்கு உருபு இல்லை. இதனை ‘விளி வேற்றுமை’ என அழைப்பர்.
(எ.கா.) கந்தா வா!
இத்தொடரில் கந்தன் என்னும் சொல்லில் இறுதி (ன்) எழுத்தானது கெட்டு, அதன் அயல் எழுத்து (த – தா என) நீண்டு அழைத்தற் பொருளைத் தருகிறது. இவ்வாறு பெயர்ச்சொல் சில மாற்றங்களுடன் அழைத்தற் பொருளில் வருவதனை ‘விளி வேற்றுமை‘ என்பர்.