காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது குஜராத்திப் பாடல் ஒன்றைக் கேட்டார். “தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்; உண்மைப் பொருண்மை உண்டு” என்ற அப்பாடல் இன்னாசெய்யாமை என்னும் கருத்தை அவருள் விதைத்தது.
அன்பு செலுத்துதல் :
காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது சிரவண பிதுர்பத்தி என்ற நாடக நூலைப் படித்தார். அதில் சிரவணன் என்ற இளைஞன் பார்வையற்ற தன் தாய், தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் ஒரு காட்சிப் படம் இருந்தது. அதைப் பார்த்தது முதல் தாமும் பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்.
அரிச்சந்திரன் நாடகம்
அரிச்சந்திரன் நாடகத்தை காந்தி ஒருமுறை பார்த்தார். உண்மையை மட்டுமே பேசும் அரசன் அரிச்சந்திரனை ஒரு பொய் பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே பல இன்னல்களைத் தருகிறான் முனிவன் விசுவாமித்திரர்.
அதனால், அரிச்சந்திரன் நாட்டையும், மனைவியையும், ஒரே மகனையும் இழக்கிறான்; சுடுகாட்டில் பணிபுரிகிறான். முனிவர் பலவேறு இன்னல்களைத் தந்தும், “பொய் சொல்லேன்’ என்று மறுமொழி கூறினான். அவனது வாய்மையை நாடகம் வாயிலாக அறிந்த காந்தி, தாம் ஒரு சத்தியவானாக இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.
எளிமை ஓர் அறம்
மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர் காந்தியடிகள். ஒருமுறை தம் மனைவி கஸ்தூரிபாய் காந்தி, ஆசிரமத்திற்கு வாங்கிய காய்கறிகளில் வழக்கத்திற்கு அதிகமாக ஓர் அணா செலவு செய்ததற்குக் காந்தியடிகள் கடிந்து கொண்டார்.
ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தார். கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார். தம் கழிவுகளை வேறு ஒருவர் அகற்ற விடாமல் தாமே அகற்றினார்.