குறியீடு – அறிமுகம்
கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு` என்ற உத்தி, ஆங்கிலத்தில் “symbol” என அழைக்கப்படுகிறது.
சிம்பல் என்பதற்கு ஒன்று சேர் என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.
அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம். அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம். பெண்ணை, விளக்கு என்று அழைப்பதற்கு பண்பு காரணமாக இருக்கிறது. பறவையான வெண்புறா சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது.
![]() |
குறியீடு |
கருவியான காரசு நீதியின் குறியீடாக இருக்கிறது. விலங்கான சிங்கம் வீரத்தின் குறியீடாக இருக்கிறது. இவ்வாறு மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் ‘குறியீடு‘ எனப்படுகிறது.
குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் (Anbolism) எனப்படுகிறது.
குறியீடு, பல துறைகளில் பயன்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதவேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்.
குறியீடு பற்றிய கொள்கை 19ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் அனைத்து மொழி இலக்கியங்களிலும் குறியீட்டைப் பயன்படுத்தும் வழக்கம், முன்பிருந்தே உள்ளது.
தமிழைப் பொறுத்தவரை, தொல்காப்பியர் காலம் முதல் இப்பயன்பாட்டை அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், உள்ளுறை உவமம்’ என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன.
தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றது.