வழக்கு :
எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.
இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும்.
இயல்பு வழக்கு :
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.
I. இலக்கணமுடையது
2. இலக்கணப்போலி
3.மரூஉ
1. இலக்கணமுடையது :
நிலம், மரம், வான், எழுது – ஆகிய சொற்களை நோக்குங்கள். இவை தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன.
இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.
2. இலக்கணப்போலி :
இல்லத்தின் முன் பகுதியை இல்முன் எனக் குறிக்க வேண்டும். ஆனால் அதனை நம் முன்னோர் முன்றில் என மாற்றி வழங்கினர்.
கிளையின் நுனியைக் கிளைநுனி எனக் கூறாமல் நுனிக்கிளை எனக் குறிப்பிடுகிறோம்.
இவ்வாறு இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
(எ.கா.) புறநகர், கால்வாய், தசை, கடைக்காண்.
தெரிந்துக் கொள்வோம் :
வாயில்-வாசல்
இல்லத்துக்குள் நுழையும் வழி இவ்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம் இது இலக்கணப் போலியாகும்.
வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம்
இது மருஉ ஆகும்
3. மருஉ
நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை. தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும். திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து. சிதைந்து வழங்கும் சொற்கள் மரூர். எனப்படும்.
(எ.கா)- கோவை, குடந்தை, எந்தை போது, சோணாடு
தகுதி வழக்கு
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும். தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
- 1. இடக்கரடக்கல்
- 2. மங்கலம்
- 3. குழூஉக்குறி
1. இடக்கரடக்கல்
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
(எ.கா.) கால் கழுவி வந்தான்.
குழந்தை வெளியே போய்விட்டது. ஒன்றுக்குப் போய் வந்தேன்.
2. மங்கலம்
செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே, செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பட்டனர்.
நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான
வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
(எ.கா) ஓலை திருமுகம்
கறுப்பு ஆடு – வெள்ளாடு
விளக்கை அணை – விளக்கைக் குளிரவை
சுடுகாடு-நன்காடு
3. குழூஉக்குறி
பவர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர்.
இவ்வாறு ஒரு குழுவினார் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
(எ.கா) பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)
- இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.
- நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
- மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம் பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் குழூஉக்குறி