சீறாப்புராணம் – புலி வசனித்த படலம்
நபிமுகம்மதுவை, வணங்கி ஒருவன் கூறியசெய்தி:
* அடர்ந்த காட்டில் வாழும் புலியொன்று அங்கு வாழும் சிங்கம் தவிர்த்த மற்ற விலங்குகளுக்கும், அவ்வழியே வரும் மக்களுக்கும் பெருந்தொல்லை கொடுக்கிறது. அப்புலியைக் கண்டு மக்களும் அஞ்சுகின்றனர்; விலங்குகளும் அஞ்சுகின்றன”. என்று முகம்மது நபியை வணங்கிய ஒருவன் கூறினான்.
புலி இருக்குமிடம் தெரிவித்தல்:
முகம்மது நபியும் மனிதன் ஒருவனும் நடக்கின்ற பாதையினிடத்து ஒரு காதவழித் தொலைவில் நெடிய அகழி போன்ற நீரோடை உண்டு. அதனருகே அடர்ந்த மரங்களையுடைய காட்டில் கொடிய வரிகளையுடைய பாய்கின்ற புலியொன்று இருந்தது.
இதையும் படிக்க : மேடைப்பேச்சு சிறப்பாக அமைய மூன்று கூறுகள்
புலியின் தோற்றம் :
புலி, தனது நீண்ட வாலினால் பூமியின் மீது அடித்து, உடல் நிமிர்ந்து, நான்கு கால்களையும் மடித்துத் தரையின்மேல் படுத்து, இரண்டு கண்களும் நெருப்புப் பொறிகளைக் கக்க, வெண் பற்கள் ஒளிவிட, வாயில் புலால் நாற்றம் வீச, முள் நெருங்கிய காட்டில் சினத்தோடு அப்புலி இருந்தது.
புலியின் வெறிச் செயல் :
அப்புலியானது கூர்மையான நகங்களையுடைய சிங்கக் கூட்டங்கள் அன்றி மற்ற விலங்குகளின் இறைச்சியை உண்ணும்.
பெரிய பனை போலும் தும்பிக்கையினையும் மூன்று மதங்களையும் உடைய யானைகளின் கொம்புகளைப் பிடித்து இழுத்து அவற்றின் மார்பினைக் கீறிக் குருதியினைக் குடித்து உறங்காது நின்று, பெரிய அரிய மலைகளும் அதிருமாறு இடியைக் காட்டிலும் அதிகமாக முழங்கும்முழங்கும்.
வனத்தில் வாழும் விலங்குகள் :
புலி முழங்கிடும் ஓசையினைக் கேட்ட அளவில் பெரிய காட்டெருமைகளும், பிளந்த பாதங்களையுடைய பன்றிகளும், அடர்ந்த முடிகள் நிரம்பிய கரடிகளும், கலைமான்களும், நிலத்தில் பதியப்பெற்ற தங்கள் கால்கள் தடுமாற்றமுற்று விழுந்து உடல் நடுக்கமடையும்,
முகமது நபி புலியிருக்குமிடம் கேட்டல் :
காட்டில் உயிரினம் புலிக்கு அஞ்சி வாழும் செய்திகள் அனைத்தையும் முகம்மது நபிகள் கேட்டறிந்தவுடன், அவரது அழகிய இரு தோள்களும் மலைகளைப் போலப் பருத்தன.
அவ்வாறு கூறிய மனிதனைப் பார்த்துத், தொல்லை தரும் அப்புலியானது இருக்குமிடம் எவ்விடம் என்று கேட்டார். அதற்கு அம்மனிதன் வெற்றியைத் தரும் வாள்படை தாங்கிய வேந்தரே ! அருகில்தான் இருக்கிறது என்று சொன்னான்.
முகமது நபி வருவதைப் புலிபார்த்தல்
மலைகளில் வாழும் சிங்கத்திற்கு ஒப்பாகிய நபிமுகம்மது, தமது மலை போன்ற தோள்கள் அசையும்படி, கூர்மையான ஒளிவிடும் வேற்படையினை வலக்கையில் அழகுடன் ஏந்தியவாறு பாதையில் மகிழ்ச்சியுடன் நடந்து வருவதை அவ்வரிப்புலி பார்த்தது.
இதையும் படிக்க : அம்பேத்கர் ஆட்சி அரும் பணிகள்
புலி முகம்மது நபியை வணங்குதல் நபிமுகம்மது வருவதைப் பார்த்த பொழுது, கூர்மை பொருந்திய நகத்தினையும், திண்ணிய வலிமையினையும் உடைய அப்புலியானது தனது வாலை வளைத்து, அரிய உடல் நடுக்கமுற்றுப் பையப்பைய நடந்து வந்து, குளிர்ச்சி தங்கிய தளிர்போலும் திருவடிக் காட்சி கிடைத்ததென்று, தன் தலையைத் தாழ்த்திப் பணிந்து வணங்கியது. முகம்மது நபி, தன் கரத்தினால் புலியைத் தடவுதல்.
தம் முன்னால் வந்து தெண்டனிட்டு, வாய்பொத்தி மிகத்தாழ்ந்து அறிவு மிகும்படித் துதித்த, கூர்மையான நகத்தினை உடைய அப்புலியை, மந்திர மலைக்கொப்பாகிய முகம்மது நபி மிகுந்த மகிழ்ந்து அழகிய மணிக்கரத்தினால் தலையையும் முகத்தையு தடவியருளினார்.
முகம்மது நபியைப் புலி வணங்கிப் புறப்படுதல்.
முகம்மது நபி, புலியை நோக்கி, “நீ. இன்று முதல் உயிர்வதை செய்வதை விடுத்து இவ்விடத்திலிருந்து அகன்று வேறொரு காட்டிற்குப் புகுவாயாக” என்று அருளினார்.
அப்புலியானது முகம்மதுநபியின் மணம் பொருந்திய தாமரைப் பூப்போன்ற அடிகளை வணங்கி, நல்லது நல்லது என்று சொல்லிப் புகழ்ந்தவாறே அவ்விடத்தை விட்டு நடந்து சென்றது.