விண்ணியல் அறிவு :
பேரண்டத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. மேலை நாட்டறிஞர் இது குறித்து விரிவாக ஆய்ந்துள்ளனர்; ஆய்ந்தும் வருகின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதைப் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலைநாட்டினர் உறுதி செய்தனர்;
இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதையும். இவ்வண்டப்பரப்பையும் அதன்மீது அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது.
வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. வானூர்தியைப் பழந்தமிழர்கள் விண்ணில் செலுத்தியிருக்கலாம் என உணர முடிகிறது.
கனிமவியல் அறிவு : சிலப்பதிகாரம் பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்குகிறது. ஊர்காண் காதையில்,
“ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்‘
எனும் இவ்வடிகள் ஆழ்ந்த பொருளுடையன. ஐவகை மணிகளும் ஒளிவிடும் திறத்தினால் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் மூலப்பொருள் ஒன்றே. இவ்வறிவியல் சிந்தனை தற்போதைய வேதியல் கூறுகளுடன் ஒப்புநோக்கத் தக்கது.
மண்ணியல் அறிவு
தமிழர் தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்பப் பாகு படுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள். மேலும் செம்மண். களர்நிலம், உவர் நிலம் என்றும் பகுத்துள்ளனர்.
நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலமென்றும், சுவையின் அடிப்படையில் உவர் நிலம் என்றும், தன்மையின் அடிப்படையில் களர் நிலம் என்றும் நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.
தமிழர் செம்மண் நிலத்தை அதன் பயன் கருதிப் போற்றினர். இதனைச் ‘செம்புலப் பெயல் நீர்போல்’ என்னும் குறுந்தொகை வரி உணர்த்தும், உவர் நிலம் மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன் தருவதில்லை.
இதனை, ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர் நிலம்’ என்னும் புறநானூற்று வரிகள் புலப்படுத்துகின்றன. எதற்கும் பயன்படாத நிலம் களர் நிலம். இதனைப் ‘பயவாக் களரனையர் கல்லாதவர்” என்பார் திருவள்ளுவர்.
சித்த மருத்துவம்
பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்த மருத்துவமாயிற்று. தேரையர், அகத்தியர், போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் தமிழர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன.
உலகில் பின்விளைவுகளற்ற ஒரே மருத்துவம் சித்த மருத்துவமே. இன்று பரவலாகப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்னும் மருந்தில்லா மருத்துவ முறையை, அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர்.
அணுவியல் அறிவு
இன்றைய அறிவியல், அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என்று ஆய்ந்திருக்கிறது. ஔவை ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி‘ என்று சொல்கிறார்.
‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்‘ என்று கம்பரும் கூறுவார். இதன்மூலம் அணுச் சேர்ப்பும், அனுப் பிரிப்பும் பற்றிய கருத்துகள் அன்றே அரும்பியுள்ளதை அறியலாம்.
பொறியியல் அறிவு
பண்டைத் தமிழகத்தில் எந்திரவியல் பற்றிய அறிவு ஆழமாக இருந்திருக்கிறது. கரும்பைப் பிழிவதற்கும் எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இதனைத் ‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த‘ என்று பதிற்றுப்பத்து குறிப்பிடும்.
நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதை ‘அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்’ என்னும் பெருங்கதை வரியின் வாயிலாக அறிய முடியும்.
மேற்கண்ட துறைகளிலெல்லாம் பண்டைய தமிழன் சிறந்தோங்கி விளங்கினான். தமிழன் இன்றைய அறிவியல் முன்னோடி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.