வாழைமரம், வாழைப்பழம். இவ்விரு சொற்களையும் நோக்குங்கள்.
முதல் சொல்லில் வாழை + மரம் = வாழைமரம் என இருசொற்கள் இணைந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே சேர்ந்துள்ளன.
இரண்டாவது சொல்லில் வாழை + பழம் = வாழைப்பழம் என இருசொற்கள் இணையும்போது வல்லின மெய் (ப்) சேர்ந்து வந்துள்ளது. இவ்வாறு இருசொற்கள் இணைவதற்குப் புணர்ச்சி என்பது பெயர்.
1) இயல்பு புணர்ச்சி என்றால் என்ன?
முதல் தொடரில் இயல்புப்புணர்ச்சியும் இரண்டாவது தொடரில் விகாரப்புணர்ச்சியும் இடம்பெற்றுள்ளன.
நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது எவ்விதமாற்றமும் ஏற்படவில்லையென்றால், அஃது இயல்புப்புணர்ச்சியாகும்.
( எடுத்துக்காட்டு )
பொன் + வளையல் = பொன்வளையல்; மலர் + மாலை = மலர்மாலை; பனை + மரம் = பனைமரம்.
நிலைமொழி என்றால் என்ன?
இணையும் இருசொற்களில் முதல்சொல் (மெய்யாக) நிலைமொழி எனப்படும்.
நிலைமொழியின் இறுதி, புள்ளிஎழுத்தாக இருந்தால் மெய்யீறு எனச் சொல்லுதல் வேண்டும்.
உயிர்மெய்யாக இருந்தால்,உயிரீறு எனச் சொல்லுதல் வேண்டும்.
பொன் + வளையல் – நிலைமொழியில் ன் மெய்யீறு.
பனை + மரம் – நிலைமொழி இறுதி எழுத்தாகிய னை (ன்+ஐ) உயிரீறு.
1. ஓர் எழுத்துச் சொல்லில் மட்டும் உயிர் ஈறு வெளிப்படையாகத் தெரியும்.
( தீ + பிடித்தது = தீப் பிடித்தது)
2. ஓர் எழுத்துச் சொல்லாக உயிர்மெய் எழுத்து வரும்போது (ப் + ஊ) எனப் பிரித்து உயிர் ஈற்றைக் காணுதல் வேண்டும். பூ (ப்+ஊ) + பூத்தது =பூப்பூத்தது.
வருமொழி என்றால் என்ன?
இணையும் இருசொற்களில் இரண்டாவது சொல் (உயிர்மெய்யாக) வருமொழி எனப்படும்.
வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய்யாக இருந்தால், மெய் முதல் எனச் சொல்லுதல் வேண்டும். உயிராக இருந்தால் உயிர்முதல் எனச் சொல்லுதல் வேண்டும்.
(எ.கா.) பொன் + வளையல் = பொன் வளையல் (வ் + அ) இங்கு ‘வ்’ மெய்முதல். கண் + அழகு = கண்ணழகு
(இங்கு அ உயிர்முதல்) நிலைமொழி ஈற்றையும் வருமொழி முதலையும் நன்றாகத் தெரிந்து கொண்டால்தான் புணர்ச்சியைப் புரிந்துகொள்ளுதல் இயலும்.
2) விகாரப்புணர்ச்சி என்றால் என்ன?
நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால், அதனை விகாரப்புணர்ச்சி என்பர்.
(எ.கா)
1. பலா + சுளை = பலாச்சுளை – மெய் தோன்றியது.
2. படம் + காட்சி = படக்காட்சி – நிலைமொழி ஈறுகெட்டு மெய் தோன்றியது. (ம் மறைந்து க் தோன்றியது)
3.பொன் + சிலை = பொற்சிலை – நிலைமொழி ஈறு திரிந்தது.(ன்-ற் ஆனது)
விகாரப்புணர்ச்சி தோன்றல்,திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.