1.தொன்மை :
“முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் ; அம்முதல் மாந்தன் பேசிய மொழி தமிழ் மொழியே” என்கின்றனர் ஆய்வாளர்.
அக்குமரிக்கண்டத்தில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள் அமைத்து மொழியை வளர்த்தனர் தமிழர். நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கியதால் தமிழ்ச்சான்றோரால் மூன்றாவது தமிழ்ச் சங்கம் தென் மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பர்.
![]() |
செம்மொழி தகுதிப்பாடுகள் |
2. பிறமொழித் தாக்கமின்மை
காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன, வடமொழியிலும், தமிழ், பிராகிருதம், பாலிமொழிச் சொற்கள் கலந்துள்ளன.
இவ்வாறு தமிழிலும் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. பிறமொழிச் சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால் தமிழ் ஒன்றே பிற மொழிச் சொற்களை நீக்கினாலும், இனிதின் இயங்க வல்லது.
3.தாய்மை
தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது. அது பிராகுயி முதலிய வடமொழிகளுக்கும் தாயாக விளங்குகிறது என்பார் கால்டுவெல்.
ஆயிரத்தெண்ணூறு மொழிகளுக்கு வேர்ச் சொற்களையும், நூற்றெண்பது மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும் தந்துள்ளது தமிழ். ஆதலால், உலகமொழிகளுக்கு எல்லாம் தாயாகத் திகழ்கிறது தமிழ் என்பது பெருமைக்குரிய ஒன்று.
4.தனித்தன்மை
இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது தமிழ், தமிழர் அகம், புறம் என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். திருக்குறள். மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்தது.
உலகில் பேசப்படும் மொழிகளுள் தமிழின் பழைமையையோ அதன் பெருமையையோ எம்மொழியும் நெருங்கவியலாது. தமிழ்மொழி இறவா இலக்கிய, இலக்கண வளம் கொண்டு தனக்கெனத் தனி நோக்கும் போக்கும் கொண்டுள்ளது.
5. பொதுமைப் பண்பு:
தமிழர், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தனர்; ஒன்றே குலம் எனப்போற்றினர்; தீதும் நன்றும் விளைவது அவரவர் செயலால் என்றுணர்ந்தனர்; செம்புலப் பெயல்நீர் போல அன்புள்ளம் கொண்டனர்; இவ்வாறான பொதுமையறங்களைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவை உலகத்தால் போற்றப்படுகின்றன.