சங்க இலக்கிய வரலாறு-முச்சங்க வரலாறு கேள்வி பதில்கள்

 முச்சங்க வரலாறு :-

அறிமுகம்

தமிழ் இலக்கியம் நீண்ட நெடும் மரபு உடையது. அதன் இலக்கிய, இலக்கண நீர்மைகள் பழமையானது. வளஞ்செறிந்த தமிழ் நலஞ்சிறந்த இலக்கியத்தாலும் பெருமையுடையது ஆகும்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, இன்றைய நாள் வரைக்கும் தோன்றிய இலக்கிய வகைகள் கணக்கிலடங்கா.

 தொன்மையான இலக்கியம் வழியே தமிழரின் நாகரிகம், பண்பாடு, மொழிவளம் முதலியவற்றை அறிந்து கொள்கிறோம்.

 அதேபோல ஒவ்வொரு கால கட்டத்திலும் தோன்றிய இலக்கிய வகைகளால் அவ்வக்கால மக்கள் வாழ்வையும், பிறவற்றையும் புரிந்து கொள்ளலாம். இவ்வகையில் இலக்கியம் அவ்வக் கால கட்டத்தைக் காட்டும் காலக்கண்ணாடி எனலாம்.

சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்று கால வரிசையில் இலக்கியம் வளர்ந்த வரலாற்றை அறிஞர் எடுத்துக்காட்டுவர்.

மூன்று சங்கங்கள் வைத்து முத்தமிழை வளர்த்தனர் பாண்டிய மன்னர்கள் என்ற செய்தி பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. பழைய இலக்கிய, இலக்கண உரையாசிரியர்கள். 

தம் உரைகளில் மூச்சங்கங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் முச்சங்கம் பற்றி விரிவான விளக்கம் தருபவர் இறையனார் களவியலுரை ஆசிரியர் நக்கீரர்.

 கி.பி.3-ம் நூற்றாண்டில் நக்கீரரால் கூறப்பட்ட உரை. 14 தலைமுறைகள் வாய் வழியாகச் சொல்லப்பட்டுப் பின் கி.பி.8-ம் நூற்றாண்டில் முசிறி நீலகண்டரால் ஏட்டில் எடுத்து எழுதப்பட்டது என்பர்.

இரண்டு மதிப்பெண் வினா – விடைகள் :-

1. சங்கம் என்றால் என்ன?

சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் குறுநில மன்னர்களும் நாட்டைக் காப்பது மட்டுமின்றி, மொழியைக் காப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தார்கள்.

 அவர்கள் புலவர்களை ஆதரித்துப் போற்றி மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை நின்றனர்.

 புலவர்களால் எழுதப்படும் இலக்கண, இலக்கியங்களை முறைப்படுத்துவதற்கு ஓர் அமைப்பு தேவை என உணர்ந்தனர். அந்த உணர்வின் அடிப்படையில் உருவானதே சங்கம் என்ற அமைப்பு.

2. முச்சங்கம் என்பன யாவை?

முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாகும்.

3. முச்சங்கம் பற்றி முதன் முதலில் கூறிய நூல் எது?

இறையனார் களவியல் உரை.

4. முச்சங்கங்கள் எங்கு செயல்பட்டன?

முதற்சங்கம் தென்மதுரையில் 4440 ஆண்டுகள் இருந்தது. இதில் 549 உறுப்பினர்கள் இருந்ததாகவும் 4449 புலவர்கள் இடம் பெற்றதாகவும் கூறுவர்.

 இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் இருந்தது. இதில் 59 உறுப்பினர்களும் 3700 புலவர்களும் இடம்பெற்றதாகக் கூறுவர்.

 கடைச்சங்கம் இன்றைய மதுரை மாநகரில் 1850 ஆண்டுகள் இயங்கியது. இதில் 449 புலவர்களும் 49 உறுப்பினர்களும் இருந்ததாகக் சுட்டுவர்.

5. அகத்தியம் எவ்வகை நூல்?

அகத்தியரால் இயற்றப்பட்ட இலக்கணநூல் அகத்தியம் என்பர். இது முழுமையாகக் கிடைக்கவில்லை.

6.முதல் சங்கம் – சிறுகுறிப்புத் தருக.

பாண்டியர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்றனை அமைத்தனர். அவருள் தலைச்சங்கத்தில் இருந்தோர் அகத்தியர், சிவள், முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் என இத்தொடக்கத்தார் 549 பேர். 

அவர்கள் உள்ளிட்ட 4449 பேர் செய்யுள் பாடினர், அவர்களால் பாடப்பட்டன எத்தனையோ பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலியன. 

அவர்களால் 444 ஆண்டுகள் சங்கம் இருந்தன. அவர்களை ஆதரித்தவர்கள் காய்சின வழுதி முதல் கடுங்கோன் முடிய 89 பேர் என்பர். அவர்கள், சங்கம் அமைத்துத் தமிழ் ஆய்ந்தது கடல் கொண்ட தென்மதுரை என்பர். அவர்கட்கு இலக்கண நூல் அகத்தியம்.

7. இடைச்சங்கம் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

இடைச்சங்கம் கபாடபுரத்தில் நடந்தது. 3700 ஆண்டுகள் சங்கம் நடைபெற்றது. 3700 புலவர்கள் பாடினர். 

அகத்தியர். தொல்காப்பியர், வெள்ளூர்க்காப்பியன். சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், கீரந்தை முதலிய 59 புலவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

 இடைச்சங்க நூல்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் போன்ற பல நூல்களாகும். இடைச்சங்கத்தை நிறுவியோர் வெண்தேர்ச் செழியன் முதலாக முத்திருமாறன் ஈறாக 59 பேர்.

 இடைச்சங்கத்தார்க்கு அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் என்பன நூல்களாக இருந்தன. 

இடைச்சங்க காலத்துப் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது.

8. கடைச்சங்கம் – சிறுகுறிப்புத் தருக.

கடைச்சங்கம் உத்தரமதுரை (இன்றைய மதுறையில் நடைபெற்றது. 1852 ஆண்டு சங்கம் நடைபெற்றது. 449 புலவர்கள் பாடினர். சிறுமேதாவியார். சேந்தம் பூதனார், பெருங்குன்றூர் கிழார். நல்லந்துவனார், மருதனிளநாகனார். 

நக்கீரர் உட்பட 49 புலவர்கள் உறுப்பினர். நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கூத்துவரி, சிற்றிசை, பேரிசை முதலான நூல்கள் பாடப்பட்டன. சங்க நூல் அகத்தியமும் தொல்காப்பியமும், சங்கத்தை நிறுவியோர் முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பேர்.

9.சங்க இலக்கியங்கள் யாவை?

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. 10. தமிழின் முதல் இலக்கண நூல் எது?

இன்று கிடைத்துள்ளவற்றுள் மிகப்பழமையானதும், தமிழின் மிகப் பழை இலக்கண நூலானதும் ஆகிய தொல்காப்பியமே முதல் இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. அதற்கு முன் தோன்றிய நூல்கள் ஏதும் கிடைத்தில,

11. தொல்காப்பியம் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் 27 இயல்களைக் கொண்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது.

12. உரையாசிரியர் என்று குறிக்கப்படுபவர் யார்?

தொல்காப்பியத்திற்கு முதன்முதலாக உரையெழுதிய இளம்பூரணணர

உரையாசிரியர் என்றே சுட்டுவர். 13. சங்க இலக்கியத்தில் ” ஏறுதழுவுதல்” என்றால் என்ன?

முல்லைக்கலிபாடலில் “ஏறுதழுவுதல்” பற்றி கூறப்படுகிறது. தலைவியை மணக்க விரும்பும் தலைவன் காளையை அடக்கி மணம்புரிய வேண்டும் என்ற பழக்கத்தைச் சங்ககாலத்தில் கடைப்பிடித்தனர். இதனை ஏறுதழுவதல் என்று அழைட்பர்.

14. மடலேறுதல் என்றால் என்ன?

தலைவியை மணக்க விரும்பும் தலைவன் களவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், தலைவியின் பெயரை ஓலையில் எழுதி தலைவன் குதினர மீது ஏறி ஊரைச்சுற்றி வருவான். இதுவே மடல் ஏறுதல் என அழைக்கப்படுகிறது.

15. “விரிச்சிக்கேட்டல்” என்றால் என்ன?

சங்ககாலத்தில் நடக்கப் போகின்ற நல்வினை தீவினை தெரிந்து கொள்ள தெய்வம் வந்து ஆடுகின்றவர்களிடம் நற்சொல் கேட்கப்படும். இவை விரிச்சிக் கேட்டல் என அழைக்கப்படும். இப்பழக்கத்தினை இன்றும் கடைப்பிடிக்கின்றனர்.

16. “உன்னம் பார்த்தல்” – குறிப்பெழுதுக?

போருக்கு, நல்வினைக்கு செல்லும் தலைவன் – உள்னம் மரத்தை பார்த்துச் செல்வார்கள். உன்னமரம் செழிப்புடன் வளம்பெற்றிருந்தால் தலைவன் வெற்றியுடன் திரும்புவான்.

 உன்னமரம் செழிப்பு இல்லாமல் வறட்சியுடன் காணப்பட்டால் பயணம் மேற்கொள்ளமாட்டார்கள். இதனை உன்னம் பார்த்தல் என அழைப்பார்கள்.

17. சங்க இலக்கியத்தை எவ்வாறு பாகுபடுத்தியுள்ளனர்?

சங்க இலக்கியத்தை இரண்டாகப் பாகுபடுத்தியுள்ளனர். அவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பத்துப்பாட்டு நூல்கள் ஆற்றுப்படை இலக்கியம். எட்டுத்தொகை நூல்களில் புறநானூறு, பதிற்றுப்பத்து இவை புறப்பொருளைக் கொண்டவை. மற்ற இலக்கியம் அனைத்தும் அகப்பொருளை கொண்டு அமைந்துள்ளது.

18. சங்ககாலம் பொற்காலம் என்று அழைக்கப்படுவது ஏன்?

சங்க காலத்தில் மக்கள் இயற்கையின் பின்னணியில் வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை பலவகைகளிலும் சிறப்புற்று, அக வாழ்க்கை, புற வாழ்க்கை எனப் பிரிக்கப்பட்டன.

 அக வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வீரம் போற்றப்பட்டது, உயரிய சான்றாண்மை மதிக்கப் பட்டது. எனவே சங்ககாலம் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது.

19. சங்க இலக்கியம் எவற்றைப் போற்றுகின்றது? 

சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் இரு கண்களாகப் போற்றுகிறது.

20. சங்ககாலத்தில் காணப்பட்ட சில பண்பாட்டு மரபுகளைக் குறிப்பிடுக. 

விரிச்சிக் கேட்டல், ஏறுதழுவுதல், மடலேறுதல், நடுகல் நடுதல், போருக்குரிய அடையாள மாலை அணிதல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top