கீழேயுள்ள பத்தியைப் படித்து கொடுத்துள்ள வினாக்களுக்கு விடையளிக்க:
தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பனை மரம் ஆகும். புன்செய் நிலங்களில் பனை மரங்களை உழவர்கள் வளர்த்தார்கள். போக்குவரத்துக்காகப் பொதுமக்கள் பயன்படுத்தும்
சாலையை வேறு யாரும் கைப்பற்றிவிடுதல் கூடாது என்பதற்காகச் சாலையின்
இருமருங்கிலும் பனைமரங்களை வளர்த்தனர். ஏரி, குளம், வாய்க்கால் முதலியவற்றின்
கரைகளின்மீது மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும் அதன் உறுதித் தன்மைக்காகவும்
பனைமரங்கள் பெருமளவில் வளர்க்கப்பட்டன. பனைமரங்கள் தரும் நுங்கு, பதநீர்,
கற்கண்டு முதலியன மனித உடலுக்குப் பெரும் நன்மையைச் செய்வன. மேலும்,
இடி மின்னல்களைத் தாங்கிக் கொண்டு நம் வாழ்வைக் காப்பன. பெரும்பான்மைத்
தமிழர் அன்றுமுதல் இன்றுவரை பனைமரத்தின் ஒலைகளால்தான் கூரைவேய்ந்து
வாழ்கிறார்கள். இவ்வாறு தமிழர்தம் வாழ்வோடு இணைந்திருக்கும் பனைமரங்கள் இன்று
அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக
மாறும்போது, அந்நிலங்களிலுள்ள பனைமரங்களே முதல் களப்பலியாகின்றன. மேலும்,
செங்கல்சூளைகளுக்காகப் பல்லாண்டுக்காலம் நெடிதுயர்ந்த பனைமரங்கள் பெருமளவில்
வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.
பனைமரங்கள் சல்லிவேர்களைக் கொண்டிருப்பதனால், கட்டடங்களுக்கு
எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. பனைமரங்கள் மிகுதியான நீரைக்கூட உறிஞ்சுவது
இல்லை. இவ்வாறு தமிழகத்தின் சிறப்புமரமாக உள்ள பனைமரத்தைக் காத்தலும்
வளர்த்தலும் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும்.
வினாக்கள் :
1. தமிழகத்தின் சிறப்பு மரம் ஆலமரம். (உண்மை /பொய்)
2. மனித உடலுக்கு நன்மைதரும் பொருள்களைப் பனைமரங்கள் தருகின்றன.
(உண்மை/பொய்)
3. பனைமரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கும். (உண்மை /பொய்)
4. பனைமரங்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் வளர்ந்தால் அவை கட்டடத்தைப் பாதிக்கும்.
(உண்மை! பொய்)
5. பனைமரங்கள் மிகுதியான நீரை உறிஞ்சி நிலத்தடி நீர் மட்டத்தைக் குறைத்துவிடும்.
(உண்மை/பொய்)
விடைகள் :
1) பொய்
2) உண்மை
3) உண்மை
4) பொய்
5) பொய்
துணிவு
பன்னிரண்டு வயதிலேயே மற்போர், சிலம்பம், வாள்வீச்சு என வீரக்கலைகளை எல்லாம்
கற்றுத் தேர்ந்திருந்தான் அச்சிறுவன். மதுரைக்கு அருகில் புலியொன்று ஊருக்குள் நுழைந்து
கண்ணில்படுகின்ற மக்களையும் ஆடுமாடுகளையும் அழித்து வந்தது. அதனைக் கேள்வியுற்ற மக்கள்
அச்சத்தோடு வாழ்ந்தனர். மக்களின் அச்சத்தைப் போக்கக் கருதிய அரசர் விசயரங்க சொக்கநாதர்,
புலியைக்கொன்று வீழ்த்துபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில்,
ஒருநாள் ஊருக்குள் புகுந்த அப்புலியைத் தன்கையிலிருந்த ஆயுதத்தாலேயே கொன்று வீழ்த்தினான்
அச்சிறுவன். அரசரும் பரிசுகள் பல வழங்கி அவனைச் சிறப்பித்தார்.
இளமையிலேயே துணிச்சலும், வீரமும்கொண்டு விளங்கிய அச்சிறுவன்தான் பின்னாளில்
புலித்தேவன் என்று அனைவராலும் போற்றப்பட்டான். இந்திய விடுதலைக்குத் தென்னகத்திலிருந்து
அந்நியரை எதிர்த்த சிறந்த வீரன் புலித்தேவனாவான்.
மாணவர்களே ! நீங்களும் இளமையிலேயே துணிவுடன் செயல்படுங்கள். ஏனெனில், என்றும்
ஒருவர்க்குத் துணிவே துணையாக நிற்கும்.
நீங்கள் துணிந்து செய்த செயல்களை நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.