அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின்.
இக்குறளில் ‘அகம்’ என்பதற்குப் பதில், ‘அகன்’ எனவும், ‘முகம்’ என்பதற்குப் பதில் ‘முகன்’ எனவும் எழுதப்பட்டுள்ளதே, இது பிழையல்லவா?
‘அகம், முகம்’ என்பதற்குப் பதிலாக ‘அகன், முகன்’ என எழுதினாலும் பொருள் மாறுபடாது. இவ்வாறு ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பதனைப் ‘போலி‘ என்பர்.
ஒரு சொல்லில் இறுதி எழுத்து மட்டும் மாறுபட்டு வருவதுதான் போலியா?
அப்படியன்று. ஒரு சொல்லில், முதலிலுள்ள எழுத்தோ இடையில் உள்ள எழுத்தோ, இறுதியிலுள்ள எழுத்தோ மாறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பின், அது போலி எனப்படும்.
இப்போலி, 1. முதற்போலி, 2.இடைப்போலி, 3. இறுதிப்போலி என மூவகைப்படும். இறுதிப் போலியைக் கடைப்போலி எனவும் கூறுவர்.
ஒரு சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது வருவது முதற்போலியாகும். (எ.கா.) மஞ்சு – மைஞ்சு; மயல் – மையல்.
ஒருசொல்லின் இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது, இடைப்போலி எனப்படும். (எ.கா.) முரசு – முரைசு; இலஞ்சி -இலைஞ்சி.
ஒருசொல்லில் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது, இறுதிப்போலி (கடைப்போலி) என்பர். (எ.கா.) அறம் – அறன்; பந்தல் – பந்தர்.
அஞ்சு ரூபாய் கொடு என்னும் தொடரில், ‘அஞ்சு ரூபாய்’ என்பது எதனைக் குறிக்கிறது?
ஐந்து என்பதை தானே!..
இவ்வாறு அஞ்சு என்னும் சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறியுள்ளன.
இருப்பினும், பொருள் மாறவில்லை. எனவே, முற்றுப்போலி எனப்படும்.
பயிற்சி : கீழுள்ள தொடர்களில் காணப்படும் போலிகளை வட்டமிடுக.
1. அஞ்சு பழங்கள் வாங்கி வா.
2. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
3. மல்லிகைப் பந்தரின் கீழே தங்கினான்.