உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்று நோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்து கொண்டான். இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான். மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான்.அந்த வரையறைகளை இலக்கணம் எனப்படும்.
தமிழ் எழுத்துகளின் இலக்கண வகைகள்
* எழுத்திலக்கணம்
* சொல் இலக்கணம்
* பொருள் இலக்கணம்
* யாப்பு இலக்கணம்
* அணியிலக்கணம்
எழுத்து :
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
உயிர் எழுத்துகள் :
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
*அ, இ, உ, எ.ஒ – ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன. குறிஞ்சி ஒலிப்பதால் இந்த ஐந்து எழுத்துக்களும் குறில் எழுத்துகள் என அழைக்கப்படுகிறது. *ஆ,ஈ,ஊ,ஏ,ஐ.ஓ, ஒள – ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கின்றன. நீண்டு ஒலிப்பதால் இந்த ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிப்பதற்கு கால அளவு உண்டு. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு கொண்டே குறில் ,நெடில் என அவை வகைப்படுத்துகிறோம்.
மாத்திரை :
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு- 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு -2 மாத்திரை
மெய்யெழுத்துகள்:
மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது.
க்,ங், ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்.ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். °மெல்லினம் – ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் (இந்த ஆறு எழுத்துக்களும் மென்மையாக ஒலிக்கின்றன.) *வல்லினம் – க், ச், ட், த், ப், ற் (இந்த ஆறு எழுத்துக்களும் வன்மையாக ஒலிக்கின்றன. ) °இடையினம்-ய், ர், ல், வ், ழ், ள். ( இந்த ஆறு எழுத்துக்களும் வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்டு ஒலிக்கும்.) *மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு- அரை மாத்திரை