பேச்சும் மேடைப் பேச்சும்
ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக் கலையும் ஒன்று. பேச்சு வேறு. மேடைப் பேச்சு வேறு. வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.
பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததை உணர்த்தும் வகையில் தெரிவிக்க வேண்டும்.
பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப் பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதிக்க வேண்டும். பிறருக்கு எழுதி உணர்த்துவதைக் காட்டிலும் இனிய முறையில் பேசி உணர்த்தும் மேடைப் பேச்சு, முறையான மிகுந்த பயனைத் தரும்.
பேச்சுக் கலையில் மொழியும் முறையும்
மேடைப் பேச்சுக்கு கருத்துகளே உயிர்நாடி என்றாலும் அக்கருத்துகளை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெருகின்றன. பேச்சுக் கலையில் வெற்றிபெற வலிமையான கருத்துகள் தேவை: ஆயினும் அவற்றைக் கேட்பார் பிணிக்கும் வகையி பேசத் தெரிதல் வேண்டும்.
சிறந்த மொழிநடை :
பேச்சாளரின் நெஞ்சிலே உள்ள கருத்து, கேட்பவர் நெஞ்சங்களிலே பாயவேண்டும். மின்சாரம் பாயக் கம்பி கருவியாக இருப்பது போலக் கருத்தை விளக்க மொழி கருவியாக உள்ளது.
ஆதலால், பேசும் மொழி அழகியதாகவும் தெளிவாகவும் சிக்கல் அற்றதாகவும் இருந்தல் வேண்டும். அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்த வல்லதே சிறந்த மொழி நடை.
சொல்லைக் கொட்டிவிடக் கூடாது.
நாம் சொல்லுகின்ற முறையில் அச்சொல்லுக்குத் தனிப் பொருளும், தனி வேகமும் பிறக்கின்றது; உயிரும் உண்டாகின்றது. எனவே, சொல்லை ஆராய்ந்தறிந்து அளவாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
சொல் கிடைக்கிறதே என்று நம்மை அறியாமல் அவற்றைக் கொட்டிவிடுதல் கூடாது; கொட்டியதை நம்மால் அள்ளமுடியாது.
தெளிவும் காலமும் முக்கியம்:
நாம் சொல்லுகின்ற செய்தியை ஒருவரிடம் மிகவும் விரைவாகச் சொல்லுதல் கூடாது சொல்லியதையே திருமபத் திரும்பச் சொல்லுதல் தவறு பொய்யுரையும் மிகைப்படுத்தலும் கூடாது. நாம் எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதைத் தெளிவாகக் காலமறிந்து சொல்லுதல் வேண்டும்.