புணர்ச்சி -அடிப்படை இலக்கணம்
நாம் பேசும்போது சில சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒரு சொல் போல பேசுகிறோம். அவ்வாறே எழுதுகிறோம். தமிழரசி, நாட்டுப்பண் ஆகிய இச்சொற்கள் ஒரு சொல் வடிவம் உடையன. ஆயினும் இவை இரண்டு சொற்களில் சேர்க்கையாக வந்துள்ளன.
தமிழ் +அரசி =தமிழரசி நாடு +பண் =நாட்டுப்பண்
இவற்றில் முதலில் நிற்கும் சொல்லை ‘ நிலைமொழி ‘ என்றும் அதனோடு வந்து சேரும் சொல்லை ‘வருமொழி ‘ என்றும் அழைப்பர். இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் இணைவதை புணர்ச்சி என்பர். நிலைமொழியின் இறுதியில் வருமொழியின் முதல் எழுத்து புணர்ச்சிக்கு உரியன ஆகும்.
உயிரீறு ,மெய்யீறு :
நிலைமொழியின் இறுதியில் இறுதி எழுத்து உயிர் மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிரெழுத்து என்பதால் அது ‘ உயிரீறு ‘ எனப்படும். நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது ‘மெய்யீறு ‘ எனப்படும்.
மணி (ண் +இ ) + மாலை =மணிமாலை – உயிரீறு ; பொன் + வண்டு = பொன்வண்டு – மெய்யீறு
உயிர்முதல் ,மெய்முதல் :
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது ‘உயிர்முதல் ‘ எனப்படும். வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யெழுத்தாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் மெய்யெழுத்தாக இருந்தால் அது ‘மெய்முதல்’ என அழைக்கப்படும்.
வாழை + இலை = வாழையிலை -உயிர்முதல் ; தமிழ் +நிலம் (ந் +இ ) = தமிழ்நிலம் -மெய்முதல்
Super useful